தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்றார் பெரியார்- நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: “தர்மேந்திர பிரதான் பேசியதற்கு இப்படி கொந்தளிக்கிறார்கள்… தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்றார் பெரியார்” என மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சர்ச்சை பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து தனது கருத்தை திரும்பப்பெற்ற தர்மேந்திர பிரதான்,” என்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதனை தான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்” என பேசி இருந்தார்.

இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,”தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனாவிற்கு பிறகு பின் தங்கியுள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை. திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய நிலையில் அவரது பேச்சை திரும்ப பெற வைத்தீர்கள்.
ஆனால், திராவிட கட்சிகளின் அடையாளமாக இருக்கும் பெரியார் தனது விடுதலை நாளேட்டில் 1943ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி, ‘தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது. தமிழ் படித்ததில் பிச்சை எடுப்பதை தவிர வேறு உயிர் வாழ்வதற்கு ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால் வாழ்க்கைக்கு பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஒரு அனுபவ புலவர் பாடியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவரின் புகைப்படத்தை அனைத்து அறைகளிலும் மாலை போட்டு வைத்துள்ளீர்கள்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பேசியுள்ளார்.




