35 பந்துகளில் அபார சதம்; அதிரடியாய் வைபவ் சூரியவன்சி உலக சாதனை..!

ஐபிஎல் தொடரில் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
சென்னை, ஏப். 29 2025:

ஐபிஎல் 2025 தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது வேகமான சதமாகும்.
சூர்யவன்ஷி, 35பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். இதில் 11 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். இந்த சாதனையுடன், அவர், டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர் எனவும், இந்தியாவுக்காக ஐபிஎல்-இல் வேகமான சதம் அடித்த வீரராகவும் பெயர் பெற்றுள்ளார். இது அவரது மூன்றாவது ஐபிஎல் போட்டி ஆகும்.

இப்போட்டியில், சூர்பவன்ஷி – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (70 ரன்) சேர்ந்து 166 ரன்கள் கூட்டாக சேர்த்தனர். இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 15.5 ஓவர்களில் 212/2 என்ற ஸ்கோருடன் வெற்றிக்கு வழிவகுத்தது. இந்த வெற்றி, அணியின் ஐந்து போட்டிகளில் தொடர்ந்த தோல்விக்கு பின் கிடைத்த முக்கியமான வெற்றியாகும்.
சூர்யவன்ஷியின் இந்த சாதனைக்கு, சச்சின் தெண்டுல்கர், யுவராஜ் சிங், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூரியவன்ஷியின் திறமையை பாராட்டியுள்ளார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான சூர்யவன்ஷி, தன்னுடைய 13 வயதில் ஐபிஎல்-இல் ஒப்பந்தம் ஆனார். அவரது தந்தை, கிரிக்கெட் கனவை நிறைவேற்ற, குடும்பத்தின் நிலத்தை விற்று உதவினார். இளம் வயதிலேயே ரஞ்சித் கோப்பை, இந்தியா அண்டர்-19 அணிக்காக சதம், பீகார் உள்ளூர் போட்டியில் 300 ரன்கள் ஆகிய சாதனைகளைப் படைத்துள்ளார் சூர்யவன்ஷி. சூர்யவன்ஷியின் இந்த சாதனை, இந்திய கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரம் உதயமாகி உள்ளதை காட்டுகிறது.




