மாரடைப்பின் அறிகுறிகள் மிக சாதாரணமானதாக இருக்கும்.. கவனக்குறைவா இருக்காதீங்க !

உலக அளவில் பலரின் இறப்புக்கு மாரடைப்பு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20.5 மில்லியனுக்கும் அதிகமானோர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களால் இறக்கின்றனர்.

இந்த இதயப் பிரச்சனைகள் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றன. குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மாரடைப்பால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம் ஆகியவை மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும்.
30 வயதை எட்டிய ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் எந்த மாதிரியான அறிகுறிகள் தென்படும்?
மாரடைப்பின் முதல் அறிகுறி நெஞ்சு வலி. இதயம் செயல்பட சிரமப்படும்போது, நமது உடல் வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறி மார்பு வலி. தாங்க முடியாத அளவு, ஊசி குத்துவது போன்ற வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதும் மாரடைப்பின் மற்றொரு முக்கிய அறிகுறி. இதயம் சரியாக இயங்காதபோது, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
இதயத்துடிப்பு வேகமாகவோ அல்லது படபடப்பாகவோ இருப்பதும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இதயம் செயல்பட கஷ்டப்படும்போது இதுபோன்ற படபடப்பு ஏற்படலாம். டென்ஷன் ஆகும் போதும் படபடப்பு ஏற்படலாம். ஆனால், காரணமின்றி படபடப்பு ஏற்பட்டால் உடலில், குறிப்பாக இதயத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது, உடலின் மேல் பகுதிகளான இடது கை, தோள்பட்டை, முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிறு போன்ற இடங்களில் வலி ஏற்படலாம். இந்த வலி லேசாக ஆரம்பித்து பின்னர் தீவிரமடையும்.
அதிகப்படியான வியர்வை மாரடைப்பின் மற்றொரு அறிகுறி. இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது இது நிகழ்கிறது. காரணமில்லாமல் திடீரென்று அதிகமாக வியர்த்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளவும்.
உடல் சோர்வு பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக இதயம் பலவீனமாக இருந்தால் உடல் சோர்வு ஏற்படலாம்.
நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணத்தை பலர் செரிமானக் கோளாறுகளாக நினைத்து புறக்கணிப்பார்கள். ஆனால், இதுவும் வரவிருக்கும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். சில ஆண்கள் மாரடைப்பின் போது அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம். எனவே, இதுபோன்ற பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்.




