தமிழகம்
Trending

தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: ​தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொதுக்குழு கூட்டம் இன்று, மார்ச் 28, 2025, காலை 9 மணிக்கு சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டையுடன் கலந்து கொண்டனர்.

தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் வெகு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்போது இன்று (மார்ச்.28) முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இதில் 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 1800-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் 120 மாவட்டங்களாக தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளருடன் 15 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கூட்ட அரங்குக்கு வெளியே மயிலாட்டம், ஒயிலாட்டம் என கலை நிகழ்ச்சிகள் களைகட்ட, கூட்டத்துக்கு வருபவர்கள் அவர்களின் அடையாள அட்டை சரி பார்க்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். மதிய விருந்தாக 23 வகையிலான உணவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனது.

முக்கியத் தீர்மானங்களுக்கு வாய்ப்பு: பொதுக்குழு கூட்டத்துக்கு காலை 8 மணியளவிலேயே விஜய் வந்துவிட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு நல்கினர். தொடர்ந்து கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கள அரசியலை முன்னெடுக்காமல் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ அரசியல் செய்கிறார் விஜய் என்ற விமர்சனங்கள் உள்ள நிலையில் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button