மருத்துவமனையில் ஏ.ஆர்.ரஹ்மான்.. உடல்நிலை குறித்து விசாரித்தார் முதல்வர் !

சென்னை:பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற பின், சர்வதேச அளவில் ஏ.ஆர்.ரஹ்மான் பிரபலமடைந்தார். அதன்பின் இந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இருப்பினும் தமிழ் மொழியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்று திடீரென சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில்.. ‘இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி! இவ்வாறு பதிவிட்டுள்ளார். அது போல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்’ என தெரிவித்துள்ளார்.




