தயாநிதியின் தேர்தல் வெற்றியை உறுதி செய்த உயர்நீதிமன்றம்: வழக்கு தள்ளுபடி

சென்னை: சென்னை மத்திய தொகுதியில் திமுக எம்.பி தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட தயாநிதி மாறன் 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையும் படிங்க.. இந்தியாவில் எத்தனை எம்பிக்கள் என்றே தெரியவில்லை: கமல், விஜய்யை கிண்டலடித்த அண்ணாமலை !
இந்த வழக்கில் தனக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வழக்கில் இருந்து நீக்கக் கோரி தயாநிதி மாறன் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது தயாநிதி மாறன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன், வழக்கறிஞர் எம்.சினேகா ஆகியோரும், வழக்கு தொடர்ந்த எம்.எல்.ரவி தரப்பில் வழக்கறிஞர் சிவஞானசம்பந்தனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், திமுக எம்.பி தயாநிதி மாறனுக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.




