இசைக்கடவுள் இளையராஜாவே இந்தியாவிற்கு பெருமைதான்- அன்புமணி ராமதாஸ் நெகிழ்ச்சி

சென்னை: “சிம்பொனி இசை மட்டும் இல்லை, இசைக்கடவுள் இளையராஜாவே இந்தியாவுக்குப் பெருமை” என்று அன்புமணி ராமதாஸ் அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி தனது எக்ஸ் தள பதிவில், “‘வேலியண்ட்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றுவதற்காக இசையமைப்பாளர் இளையராஜா லண்டன் சென்றுள்ளார். நாளை மறுநாள் லண்டனில் அவர் இந்த சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்கிறார். வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவும், சிறப்பாக அமையவும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. ஐயாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை படைத்து, அவற்றை நமது மன அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் மருந்தாக வழங்கியவர் அவர். இசையின் உச்சத்தை இளையராஜா ஏற்கனவே தொட்டுவிட்டதாக நாம் அனைவரும் கருதிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த இசை மருத்துவர் தமது இசை வாழ்வில் புதிய உயரங்களைத் தேடித் தேடிச் சென்று தொடர்ந்து சாதனைகளை புரிந்து கொண்டிருக்கிறார்.

அடிப்படையில் இளையராஜா வெறும் இசையமைப்பாளர் அல்ல. அவர் இசையை உருவாக்குபவர். இசையில் ஆய்வுகளையும், புதுப்புது தேடல்களையும் மேற்கொள்பவர்களின் இலக்கு சிம்பொனி இசைக்கோர்வையை உருவாக்குவதே. சிம்பொனி இசைக்கோர்வைகளை விட சிறந்த இசையை அவர் ஏற்கனவே படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க.. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு விஜய் ஆதரவு ?- நிர்வாகி பேச்சால் அதிர்ந்த போராட்டக்களம் !
இருப்பினும், சிம்பொனி இசையை ஆவணப்படுத்துவதற்காகவே அவர் ‘வேலியண்ட்’ என்ற படைப்பை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் ஜோசப் ஹேடன், வூல்ஃப்காங் அமாடியஸ் மொசார்ட், லுட்விக் வான் பீத்தோவன், பிராண்ஸ் சூபேர்ட், ஃபீலிக்ஸ் மெண்டல்சன் போன்றோரின் வரிசையில் இளையராஜாவும் இடம்பெறுவார். இது அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
லண்டன் பயணத்திற்கு முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, “சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்கான பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை” என்று பெருமிதத்துடன் கூறினார். “உண்மையில் சிம்பொனி இசை மட்டுமல்ல, இசைக்கடவுள் இளையராஜாவே இந்தியாவுக்குப் பெருமை. அதை வேலியண்ட் நிரூபிக்கும். வாழ்த்துகள் ராஜா” என்று அன்புமணி தெரிவித்தார்.




