பூமியின் நண்பனுக்கு ஆபத்து…! நிலவை நெருங்கும் விண்கல்…

வாஷிங்டன் ஜூன் 8 2025:

‘2024 YR4’ எனும் விண்கல் நிலவை மோத வாய்ப்பு இருப்பதாகவும், இந்த சம்பவத்தால் நாம் நிலவை நிரந்தரமாகக்கூட இழக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். அப்படி நடந்தால் அது பூமியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
நாசாவின் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி ‘2024 YR4’ எனும் விண்கல்லை, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இக்கல் பயணிக்கும் பாதைக்கு குறுக்கே பூமி வரும், இதனால் இந்த விண்கல் பூமி மீது மோதும் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்று இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இக்கல் நிலவு மீது மோத வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
தொடக்கத்தில் 3.8% மட்டுமே வாய்ப்புகள் இருந்தது. ஆனால் இப்போது இது 4.3%ஆக அதிகரித்திருக்கிறது. இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, இந்த கல் மோதினாலும், நிலவு அதன் சுற்றுவட்டப்பாதை பாதையிலிருந்து விலகாது என்பதுதான். ஆனால் அதுவுமே கூட 100% உறுதியாக சொல்லிவிட முடியாது.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், “ஜேம்ஸ் வெப் தொலைநோக்கின் ‘Near-Infrared Camera’ மூலம் நாங்கள் தொடர்ந்து விண்கல்லின் பாதையை ஆய்வு செய்து வந்தோம். இந்த ஆய்வில் புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதன்படி நிலவை இக்கல் 2032ம் ஆண்டு தாக்கலாம். முதன் முதலில் இக்கல் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமாக பூமிக்கு 70 லட்சம் கி.மீ நெருக்கத்தில் வரும் விண்கற்கள் ஆபத்தானவையாகும். அந்த வகையில் இந்த விண்கல்லும் ஆபத்தானதுதான்.

நிலவுடன் ஒப்பிடும்போது இக்கல், மிகவும் எடை குறைந்தது. எனவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை” என்று கூறியுள்ளனர். ஆனால் சில தனியார் விண்வெளி ஆய்வாளர்கள், இக்கல் நிலவு மீது மோதும்போது நிலவு பூமியை விட்டு மேலும் விலகி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அதன் விளைவுகளை பூமி எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.




