கர்நாடகாவில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடாது- வாட்டாள் நாகராஜ் கொக்கரிப்பு

ஓசூர்: “மேகேதாது அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் அறிவிக்காவிட்டால், கர்நாடகாவில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடாது,” என வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேகேதாதுவில் அணைக் கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருவதால், இதனை கண்டித்து, கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்ப்பட்டோர் இன்று (மார்ச் 8) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தமிழக – கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு, தமிழகத்துக்குள் நுழைய முயன்றனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆனேக்கல் போலீஸார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியது: “ தமிழக அரசை கண்டித்து நாங்கள் பந்த்தில் ஈடுபட உள்ளோம். மேகேதாட்டு அணையைக் கட்ட எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல, தமிழக தலைவர்கள் அனைவரும் மேகேதாது அணைக்கு எதிராக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க.. அதிமுக வெறும் மாய பிம்பம்.. தொண்டர்கள் ஏமாற வேண்டாம்- டிடிவி தினகரன் பேச்சு
ஒரு மாதத்துக்குள் அவ்வாறு தெரிவிக்காவிட்டால், முதல் போராட்டமாக கர்நாடக மாநிலத்தில் தமிழ்த் திரைப்படங்களை ஓட விடமாட்டோம். மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு எதிராக தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு’ என்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.
காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்கவே நாங்கள் மேகேதாது அணையை கட்டுகிறோம். காவிரி, மேகேதாட்டு, மாதாயி உள்ளிட்ட அணைகளுக்காக தமிழகம், மகாராஷ்டிரா மாநிலங்களை கண்டித்து மாநிலம் தழுவிய பந்த் நடக்கும்” என்று அவர் கூறினார்.




