தமிழகம்

ஆபரேட்டர்களுக்கு 500 கோடி ரூபாய் கடன்.. 'கம் பேக்' கொடுக்கும் அரசு கேபிள் டிவி !

சென்னை: அதிக வாடிக்கையாளர்களையும், கேபிள் டிவி ஆபரேட்டர்களையும் தன் பக்கம் ஈர்க்கும் நோக்கில், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எச்டி செட்டாப் பாக்ஸ் வாங்க கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு 500 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பலர் அரசு கேபிள் நிறுவனத்தில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் நிறுவனங்களின் அதிகப்படியான கட்டணத்தால், வாடிக்கையாளர்களும் அரசு கேபிள் டிவியை நோக்கி படையெடுப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு தனியார் கேபிள் டிவி நிறுவனங்களும், டிடிஎச் சேவை வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிக கட்டணத்தால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளான சூழலில், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் 200-க்கும் மேற்பட்ட சேனல்கள் அடங்கிய அனலாக் இணைப்பு 200 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. பின்னர், அனைத்து கேபிள் சேவைகளும் டிஜிட்டலுக்கு மாற வேண்டும் என்ற ட்ராய் உத்தரவைத் தொடர்ந்து, அரசு கேபிள் டிவி நிறுவனமும் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை வழங்கி வருகிறது. தற்போது, தனியாருக்கு போட்டியாக எச்டி தரத்தில் சேவைகளை வழங்கும் வகையில், எச்டி செட்டாப் பாக்ஸ்களை வழங்க வேண்டும் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அரசு கேபிள் டிவி எச்டி தரத்துக்கு மாற உள்ளது. இதற்காக கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. 25,000 கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வாங்க 500 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. தமிழக வேளாண் பட்ஜெட் 2025/26- முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குனர் வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா ஆகியோர் தமிழகம் முழுமும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை நேரில் சந்தித்து அரசு கேபிள் டிவியுடன் இணையுமாறு வலியுறுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனங்களின் கட்டண அதிகரிப்பால், அரசு கேபிள் டிவியை நோக்கி கேபிள் டிவி ஆபரேட்டர்களும், வாடிக்கையாளர்களும் அதிகளவில் வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு 12 லட்சமாக இருந்த அரசு கேபிள் டிவி இணைப்புகளின் எண்ணிக்கை, பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு 15,57,000 ஆக உயர்ந்தது. இருப்பினும், பழைய எஸ்டி செட்டாப் பாக்ஸ் பற்றாக்குறை மற்றும் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் காரணமாக மீண்டும் ஒரு லட்சம் இணைப்புகள் குறைந்துள்ளன. இந்த இணைப்புகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்கவும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இன்டர்நெட் வழியாக ஐபிடிவி சேவையை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எச்டி செட்டாப் பாக்ஸ் வாங்குவதற்கு வங்கிக் கடன் பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2011ஆம் ஆண்டு அரசு கேபிள் டிவியில் பதிவு செய்திருந்த 26,000 ஆபரேட்டர்களில், தற்போது 10,000 ஆபரேட்டர்கள் மட்டுமே உள்ளனர். தனியாருக்குச் சென்ற ஆபரேட்டர்களை மீண்டும் அரசு கேபிள் டிவியுடன் இணைத்து, இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அரசு கேபிள் டிவியில் புதிய எச்டி பாக்ஸ் வருகையால், குறைந்த விலையில் சிறப்பான சேவையை பொதுமக்களுக்கு வழங்க முடிகிறது. இதனால், பல தனியார் நிறுவனங்களை விட்டுவிட்டு, அரசு கேபிள் டிவியை நோக்கி ஆபரேட்டர்களும், வாடிக்கையாளர்களும் வருவதாக அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button