12 வீடுகளில் குரு நின்ற பலன்கள்


லக்னம் முதல் 12 ஆம் வீடு வரை உள்ள 12 வீடுகளில் குரு எந்த வீட்டில் நின்றால் என்ன மாதிரியான பலன்கள் நடக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
குரு ஒரு முழு சுப கிரகம். எனவே அவர் 1, 5, 9 ஆகிய திரிகோண வீடுகளில் நிற்பது சிறப்பு.
குரு லக்னத்தில் நிற்கும் போது திக் பலம் பெறுகிறது. எனவே ஜாதகர் நல்ல உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், நல்ல சிந்தனைகள், எடுத்த காரியத்தில் வெற்றி மற்றும் புகழ், அந்தஸ்துடன் சிறப்பாக வாழ வழி உண்டு எனலாம்.
2 இல் குரு நின்றால் கல்வியில் நன்றாக தேர்ச்சி பெறுவார். நல்ல பண வரவு உண்டு. சிறப்பான குடும்பமும் அமையும்.
3 இல் குரு நின்றால் நல்ல தைரியம், வீரியம் இருக்கும். நல்ல புகழ் பெற வாய்ப்பு உண்டு. எழுத்து திறமை, இசையில் புலமை இருக்கும். இளைய சகோதரத்தால் மேன்மை உண்டு.
4 இல் குரு இருந்தால் நல்ல கல்வி உண்டு. தாயாரால் மேன்மை தாயாருக்கு மேன்மை, வீடு, நிலம், சொத்து சேர்க்கை, வாகன வசதி போன்றவை அமையும்.
5 இல் குரு இருந்தால் பூர்வ புண்ணியம் உண்டு. அதிர்ஷ்டமும் உண்டு. நல்ல புத்திசாலித்தனமும், சிறந்த எண்ணங்களும் உண்டு. பொதுவாக குழந்தைகளால் மேன்மை, குழந்தைகளுக்கு மேன்மை போன்ற சுப பலன்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு மட்டும் காரகோ பாபநாஸ்தி விதிப்படி, தாமத புத்திர பாக்கியம், குழந்தைகளுக்கு பின்னடைவு போன்ற பலன்கள் ஏற்படலாம்.

6 இல் குரு நின்றால் சுப கடன்கள் ஏற்படும். ஆனால் கடன்கள் கட்டுக்கு அடங்கி இருக்கும். நோயற்ற வாழ்க்கை உண்டு. நோய் வந்தால் சீக்கிரம் குணமாகும். சிறந்த வேலை உண்டு.
7 இல் குரு நிற்கும் போது திக்பலம் முழுவதும் இழந்து நிஷ் பலம் ஏற்படும்.எனினும் லக்னத்தை பார்க்கும் என்பதால் சிறப்புண்டு. மேலும் இயற்கை சுபரான குரு ஏழாம் வீடு என்னும் கேந்திர ஸ்தானத்தில் இருப்பது விசேஷம் இல்லை. இருப்பினும் ஜாதகருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வசதியான வாழ்க்கை துணை கிடைக்கும். வாழ்க்கைத் துணையினால் மேன்மை உண்டு. கூட்டுத் தொழில் செய்யலாம்.

8 இல் குரு நின்றால் ஆயுள் விருத்தியாகும். இருப்பினும் புத்திர விஷயத்திலும், பண வரவிலும் பின்னடைவு உண்டு. தூர இடங்களில் சென்று வசிக்க நேரிடும்.
9 இல் குரு நிற்பது சிறப்பு. பூர்வீக சொத்து அமையும். தகப்பனாரால் அனுகூலம் உண்டு. தெய்வ காரியங்களில் ஜாதகர் ஈடுபடுவார். பாக்கியங்களை அனுபவிப்பார்.
10 இல் குரு நின்றால் தொழிலில் மேன்மை உண்டு. ஆசிரியர் தொழில், வங்கி தொழில், நிதி சம்பந்தப்பட்ட தொழில் அமையலாம்.
11 இல் குரு நல்ல பண வரவு, செல்வாக்கு, அதிகாரம், எடுத்த காரியங்களில் வெற்றி, புகழ் எல்லாவற்றையும் கொடுப்பார்.
12 இல் குரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு உண்டாக்கித் தருவார். சுப விரயங்கள் உண்டு. நிம்மதியான தூக்கம், நல்ல இல்லற சுகம் கிடைக்கும்.
மேலே சொன்னவை எல்லாம் பொதுப் பலன்கள் தான். மற்ற கிரக நிலைகள் பொருத்துப் பலன்கள் மாறக்கூடும்.




