
பயங்கரவாதம் என்பது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னை. பயங்கரவாதிகளுக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என தி.மு.க எம்.பி கனிமொழி கூறினார்.
மாஸ்கோ (ரஷ்யா), மே 24 2025:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைக்க அனைத்துக் கட்சி பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளது. இதில், தி.மு.க எம்.பி கனிமொழி ரஷ்யா சென்றுள்ளார். இந்த நிலையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு ரஷ்யாவில் அவர் அளித்த பேட்டியில், “ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் பிரதமர் மிகைல் ஃபிராட்கோவையும் நாங்கள் சந்தித்தோம், அவர் ரஷ்ய மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவரும் ஆவார்” என்றார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, “ரஷ்யாவில் சிந்தனையாளர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்களை நாங்கள் சந்தித்தோம். இந்த நாடு இந்தியாவின் மிக முக்கியமான நட்பு நாடு ஆகும். இந்திய அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட இந்த அனைத்துக் கட்சிக் குழு, ரஷ்யாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சித்தாந்தங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்துள்ளது, மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு, அதன் போது மற்றும் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது பற்றிய எங்கள் நிலைப்பாட்டை விரிவாக விளக்கியுள்ளோம்” என்றார்.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கூடாது
மேலும்., “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் ரஷ்யாவின் புரிதலையும் இந்தியாவிற்கு அதன் ஆதரவையும் நாங்கள் கோரியுள்ளோம்… பயங்கரவாதம் என்பது இந்தியா மட்டுமல்ல, உலகமே எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை. எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கக்கூடாது” என்று கனிமொழி குறிப்பிட்டார்.




