ஜெட் வேகத்தில் உயரும் ரேட்.. நகை வாங்குபவர்கள் தொடர் அவதி !

சென்னை: தங்கம் விலை இன்று மீண்டும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.66,480-க்கு விற்பனையாகிறது. இதனால் சுப காரியங்களுக்கு நகை வாங்கும் நடுத்தர மக்கள் தொடர்ந்து சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்தால், இந்தியாவில் தங்கம் விலை மாற்றமடைந்து வருகிறது. இந்த ஆண்டின் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஜனவரி 31-ம் தேதி ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐ தாண்டி, பிப்ரவரி 1-ம் தேதி ரூ.62,000-ஐ எட்டியது. பிப்ரவரி 11-ம் தேதி ரூ.64,480 ஆகவும், 20-ம் தேதி ரூ.64,560 ஆகவும் உயர்ந்தது.

பின்னர், சில நாட்களுக்கு விலை குறைந்தாலும், பிப்ரவரி 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர், விலை ஏற்ற இறக்கமாக இருந்து, கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. அதன் பிறகு, படிப்படியாக அதிகரித்து ரூ.64,440 ஆக உயர்ந்தது. எனினும், தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு பவுன் ரூ.66,500-ஐ நெருங்கியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,310-க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.66,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.114-க்கு விற்பனையாகிறது.




