தொகுதிக்கு இரண்டு தடுப்பணைகள்.. அமைச்சர் துரைமுருகன் உறுதி !

சென்னை: “தங்கள் தொகுதிகளில் அதிக அளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என அனைத்து எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். நிதி நிலைமை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 2 தடுப்பணைகள் கட்டப்படும்” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 18) கிணத்துக்கடவு எம்எல்ஏ செ.தாமோதரன், “கிணத்துக்கடவு தொகுதி, மதுக்கரை ஒன்றியம், திருமலையம்பாளையம் பேரூராட்சி, வழுக்கல் கிராமத்தில் உள்ள தடுப்பணையைச் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார். பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, காங்கிரஸ் எம்எல்ஏ. ராஜேஷ்குமார், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் துணைக் கேள்விகள் எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “அனைத்து எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதிகளில் அதிக அளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நிதி நிலைமை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 2 தடுப்பணைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. கங்கை கொண்டானில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரு வெள்ளத்தில் சேதமடைந்த வாய்க்கால்கள், ஆறுகளின் கரைகளை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நிலக்கோட்டை எம்எல்ஏ எஸ்.தேன்மொழி, “விருவீடு பகுதியில் முருங்கை இலைப்பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அரசு முன்வருமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளிக்கையில், “விருவீடு பகுதியில் முருங்கை இலைப்பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இல்லை. மதுரையில் உள்ள முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்தில் கடலூர், திருநெல்வேலி மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 900 முருங்கை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 50 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு அவரவர் இடங்களுக்கே சென்று பயிற்சி அளிக்கப்படுகிறது. தனியார் தொழில் முனைவோர் முருங்கை இலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வழிகாட்டுதல் வழங்கப்படும்” என்றார்.




