விஜயை எதிர்த்து போட்டி: காயத்ரி ரகுராம் பரபரப்பு பேச்சு

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையின் அனுமதி கிடைத்தால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம், “பாஜக தலைவர் பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில், அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். பாஜக தலைவர்களுக்கு தமிழ்நாட்டு மண்ணின் வலிமையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வும் புரியாது. 2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமை அனுமதித்தால், தவெக தலைவர் விஜய்யை எதிர்த்துப் போட்டியிடத் தயாராக இருக்கிறேன். தொகுதி மறுவரையறை என்பது பாஜகவின் தந்திரம். அனைத்துக் கட்சிகளும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளன. ஆனால் அண்ணாமலை, தமிழ்நாட்டுக்கு எதிரான அரசியல் செய்கிறார். தமிழ்நாட்டில் பாஜக எதற்காக இருக்கிறது என்றே தெரியவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து எதைக் கேட்டாலும், அதைத் திசை திருப்புவதிலேயே திமுக அரசு கவனமாக இருக்கிறது. தங்கள் மகனை எப்படி முன்னேற்றுவது என மட்டுமே அவர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் இங்கிருக்கும் மக்களின் குழந்தைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இதே செயல்கள் ஜெயலலிதா ஆட்சியில் நடந்திருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஒரு காவல்துறை அதிகாரி அல்லது அரசு அதிகாரி தவறு செய்தால், உடனடியாக அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று குற்றச் செயல்களில் ஈடுபடும் காவல்துறையினருக்குப் பதவி உயர்வுதான் கிடைக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. திமுக ஆட்சியும் மோசமாக உள்ளது. ஆனால், தந்தையும் மகனும் மாறி மாறி ஒருவருக்கொருவர் 100 சதவீத மதிப்பெண்கள் கொடுத்துக்கொள்கிறார்கள்” எனத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாகக் களம் காண்கிறது. இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா எனப் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம், விஜய்யை எதிர்த்துப் போட்டியிடத் தயார் எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




