ஆயுத இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் இந்தியா- முதலிடம் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க !

சென்னை: ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் எடுத்த தரவுகளின் படி, ஆயுத இறக்குமதியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் உக்ரைன் உள்ளது.
ரஷ்யாவுடன் உக்ரைன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக யுத்தமிட்டு வருகிறது. அதனால் உலக அளவில் ஆயுதம் அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக உக்ரைன் உள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2020-24 காலகட்டத்தில் அந்த தேசத்தின் ஆயுத இறக்குமதி சுமார் 100 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2015 முதல் 2019 வரையிலான ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வர்த்தக ரீதியாக 9.3 சதவீதம் வீழ்ச்சி இருந்தாலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யா (36%) மற்றும் பிரான்ஸ் (28%) ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா அதிகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது.
கடந்த 1990-94 காலகட்டத்துக்கு பிறகு முதல் முறையாக சீன தேசம் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 2015-19 மற்றும் 2020-24 இடையிலான காலகட்டத்தில் சுமார் 61% அதிகரித்துள்ளது. சீனா தான் பாகிஸ்தானுக்கு அதிகளவில் (81%) ஆயுதங்களை விநியோகித்துள்ளது. ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
2020-24 காலகட்டத்தில் மட்டும் சுமார் 33 நாடுகளுக்கு ரஷ்யா ஆயுதங்களை விநியோகித்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியா (38%), சீனா (17%) மற்றும் கஜகஸ்தான் (11%) ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்றுள்ளது.



