இயக்குனர் ஷங்கருக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை !

சென்னை: ‘எந்திரன்’திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘எந்திரன்’ திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறியுள்ளதாகவும், அந்த படத்தின் கதை ஆரூர் தமிழ்நாடனுடையது என்று கூறி அந்த படத்துக்குப் பெற்ற சம்பளத்தின் மூலம் ஷங்கர் வாங்கிய அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஷங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “ ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறவில்லை. ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில் அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதைக்காக மட்டும் 11.5 கோடி ரூபாய் ஊதியத்தை ஷங்கர் பெறவில்லை. மற்ற பணிகளுக்காகவும் பெற்றுள்ளார். இந்நிலையில், அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய முடியுமா?, தனி நீதிபதி ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நிலையில் புகாரின் இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன்?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.சிபி விஷ்னு, “தனிநபர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யலாம். அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் இயக்குநர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வழக்கை அமலாக்கத்துறையிடம் அவர் எதிர்கொள்ளலாம்” என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.




