பூமி உங்களை மிஸ் செய்தது - சுனிதா குறித்து பிரதமர் மோடி !

புதுடெல்லி: விண்வெளிப் பயணத்தை நிறைவுசெய்து பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பூமி உங்களை மிஸ் செய்தது,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பதிவில், “Crew9 மீண்டும் வருக! பூமி உங்களை மிஸ் செய்தது. அவர்களின் மன உறுதி, தைரியம் மற்றும் மனித மனப்பான்மையின் எல்லையற்ற தன்மைக்கு ஒரு சான்று. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் #Crew9 விண்வெளி வீரர்கள் உண்மையான விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள். அறியப்படாத பரந்த உலகில் அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு கோடிக்கணக்கான மக்களுக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

“விண்வெளி ஆராய்ச்சி என்பது மனித ஆற்றலின் எல்லைகளைத் தாண்டிச் செல்வது, கனவு காணத் துணிவது மற்றும் அந்தக் கனவுகளை நனவாக்கும் தைரியம் கொண்டது. தனது வாழ்நாள் முழுவதும் இந்த உணர்வை சுனிதா வில்லியம்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
“விண்வெளி வீரர்களின் பாதுகாப்பான வருகையை உறுதி செய்ய அயராது உழைத்த அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். துல்லியமான ஆர்வமும் தொழில்நுட்ப விடாமுயற்சியும் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி சுனிதா வில்லியம்ஸுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். “140 கோடி இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளில் பெருமை கொள்கிறார்கள். சமீபத்திய முன்னேற்றங்கள் உங்கள் ஊக்கமளிக்கும் மன உறுதியையும் விடாமுயற்சியையும் மீண்டும் வெளிப்படுத்துகின்றன. நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாகவே இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் உங்கள் பணியின் வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்,” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
“நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடையும்,” என்றும் பிரதமர் மோடி அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




