சினிமா

முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம்: சாய்ரா பானு கோரிக்கை

சென்னை: தன்னை ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று சாய்ரா பானு கேட்டுக் கொண்டுள்ளார். தாங்கள் இருவரும் விவாகரத்து பெறவில்லை, பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக ரஹ்மான் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.

“ரஹ்மான் விரைவில் நலம்பெற வேண்டும். நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கணவன், மனைவி என்ற உறவில் தான் நாங்கள் இருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாததால் நாங்கள் பிரிந்து வாழ்கிறோம்.

அவருக்கு எந்தவிதமான அழுத்தத்தையும் நான் கொடுக்க விரும்பவில்லை. எனவே என்னை ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று குறிப்பிட வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பிரிந்திருந்தாலும் அவருக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்” என சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவர் ரஹ்மானைப் பிரிந்து வாழ சாய்ரா பானு முடிவு செய்துள்ளார். இது மிகவும் கடினமான முடிவு.

அவர்களின் மண வாழ்வில் நிலவிய சிக்கல்கள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குள் ஆழமான அன்பு இருந்தபோதிலும், சில காரணங்களால் அவர்கள் பிரிந்துள்ளனர். வலி மற்றும் வேதனையின் காரணமாகவே இந்த முடிவை சாய்ரா எடுத்துள்ளார். தன் வாழ்க்கையின் இந்த கடினமான காலகட்டத்தில் அவருக்குத் தனிமை தேவை” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவாக படியுங்கள்.. ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை குறித்து அவரது மகன் அவசர விளக்கம்

தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தனர். அப்போது சாய்ரா பானு வெளியிட்டிருந்த ஆடியோ பதிவில், உடல்நலன் சார்ந்து மும்பையில் சிகிச்சையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button