ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கு- குற்றவாளியை சுட்டு பிடித்த நெல்லை போலீஸ் !

திருநெல்வேலி: ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான முகமது தௌஃபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை, நெல்லை மாநகர காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.
இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி 4-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் சென்ற வாரம் சரணடைந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த தௌஃபிக்கை (எ) கிருஷ்ணமூர்த்தியை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், திருநெல்வேலி பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரெட்டியாப்பட்டியில் தௌஃபிக் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தௌஃபிக்கை சுற்றி வளைத்தனர். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலைமைக் காவலர் ஆனந்த்தை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார். இதனால், தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அவரைப் பிடித்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த முகமது தௌஃபிக் மற்றும் தலைமைக் காவலர் ஆனந்த் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்த ஜாகிர் உசேன் பிஜிலி, கடந்த மார்ச் 18 ஆம் தேதி அதிகாலை தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக ஜாகிர் உசேன் பிஜிலி வெளியிட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், தான் கொலை செய்யப்படலாம் என்றும், நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையர் விஜயகுமார் ஆகியோரே இதற்குக் காரணம் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், தனது 36 சென்ட் இடத்தை அபகரிக்க முயன்றபோது தான் தடுத்ததாகவும், அதன் காரணமாகவே தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.




