
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பேச அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் இருக்கை முன்பு திரண்டனர். இது பெரும் அமளிக்குக் காரணமாக, சட்டமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்!
கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து, பேரவை காவலர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியில் அழைத்துச் சென்றனர்.
ஒருநாள் நீக்கம் – அதிமுகவின் கடும் எதிர்ப்பு!
அமளியை அடுத்து, ஒழுங்கு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, வெளியேற்றப்பட்ட அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஒருநாள் காலத்திற்கு (மார்ச் 28) சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு எதிராக அ.தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
இந்த சம்பவத்தைக் கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சியினர் உரிமைகளைப் பறிக்கும் அணுகுமுறையைக் கொண்டே அரசு செயல்படுகிறது. சட்டப்பேரவையில் எங்களின் கருத்துக்களை முன்வைக்கவே கூட அரசு விரும்பவில்லை” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆளுங்கட்சியின் விளக்கம்:
அமளியை தொடர்ந்து, ஆளுங்கட்சித் தரப்பில், “சட்டமன்றத்தில் ஒழுங்குமுறை முக்கியம். எந்த விதத்திலும் அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படமுடியாது” என்று தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் ஏற்பட்ட இந்த சம்பவம், எதிர்க்கட்சிகள் உரிமைகள், சட்டமன்ற ஒழுங்கு, ஜனநாயக நடைமுறைகள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.




