அரசியல்இந்தியா

பயங்கரவாதிகளுக்கு “கற்பனைக்கு அப்பாற்பட்ட” தண்டனை வழங்கப்படும் : பிரதமர் மோடி உறுதி

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட’ தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

மதுபானி (பிகார்) ஏப் 24 2025

பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள கடுமையான செய்தியில், “பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் தண்டனை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “இன்று (ஏப்.24 2025) பீகார் மண்ணிலிருந்து பயங்கரவாதிகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுக்கின்றேன். இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு, கண்காணித்து தண்டிக்கும் என்பதை நான் முழு உலகிற்கும் கூறுகிறேன். பூமியின் முனைகள் வரை நாங்கள் அவர்களைத் துரத்துவோம்” என்றார்.

தொடர்ந்து, “இந்தியாவின் உணர்வு பயங்கரவாதத்தால் ஒருபோதும் உடைக்கப்படாது. அதேநேரம், பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது” என்றார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, “நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த உறுதிப்பாட்டில் முழு தேசமும் உறுதியாக நிற்கிறது” எனப் பீகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இதையடுத்து, “மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர். பல்வேறு நாடுகளின் மக்களுக்கும், இந்த நேரத்தில் எங்களுடன் நின்ற தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என ஆங்கிலத்தில் தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி சுருக்கமாக கூறினார்.
மேம், “தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளும் அதற்கு திட்டமிட்டவர்களும் அவர்கள் கற்பனை செய்ததை விட அதிகமாக தண்டிக்கப்படுவார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button