ஆரம்பிக்குது தேர்தல் ஜுரம் !! அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை.

சென்னை: தமிழ்நாட்டில் எதிர்வரும் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னையில் இன்று அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.11 கோடி ஆண்கள், 3.24 கோடி பெண்கள், 9,120 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். இந்த தேர்தலுக்காக மாநிலத்தில் 68,000 வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ஞானேஷ்குமார், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரை அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடி, தேர்தல் தொடர்பான ஒழுங்குமுறைகளை சட்ட விதிகளுக்குள் இருந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாநிலத்திலிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பான அறிக்கைகளை இம்மாத இறுதிக்குள் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தவறுகளை சரிசெய்வதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதையும், வாக்காளர் பதிவு அதிகாரிகள் அவ்வப்போது கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, மேற்கொண்ட நடவடிக்கைகளை சட்டப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் இன்று மாலை 3 மணியளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள பிரதான கட்டிடத்தின் 2வது தள கூட்டரங்கில், தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனை நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், 18 வயது நிறைவு பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பது, ஒரே நபர் பல்வேறு வாக்காளர் பட்டியல்களில் இடம்பெற்றிருப்பதை சரிசெய்வது, இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது போன்ற வாக்காளர் பட்டியலின் ஒழுங்குமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வாக்குச்சாவடிகள் அமைவிடம், தேர்தல் நடத்தை விதிகளை சரியான முறையில் செயல்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டம், வரும் சட்டமன்ற தேர்தலின் முற்றிலும் ஜனநாயகத்தன்மை உடைய, சீரமைக்கப்பட்ட தேர்தல் முறையை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.




