
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா உள்ளிட்ட 6 யூடியூப்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி மே 19 2025:

கைது செய்யப்பட்ட யூடியூபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜோதி மல்ஹோத்ரா உளவாளி கும்பலுக்கு தலைவி போல செயல்பட்டதாகவும் அவர்களுக்கு கோடி கோடியாக பாகிஸ்தான் கொட்டிக் கொடுத்ததாகவும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பிரபல யூட்யூபர்களுடன் ஜோதி மல்ஹோத்ரா தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தானின் பல்வேறு தீவிரவாத தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அப்போது இந்தியா தரப்பில் சேதம் ஏற்பட்டதாகவும் பழைய வீடியோக்களை வைத்து இந்தியா குறித்து அவதூறான தகவல்களை சமூக வலைதள பக்கங்களில் சிலர் பரப்பி வந்தனர்.
இதை அடுத்து பல பிரபலங்களின் சேனல்கள் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் வந்தது. அப்படி சிக்கியவர் தான் ஜோதி மல்ஹோத்ரா சுமார் மூன்று லட்சம் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இவரது சேனலில் பல்வேறு சுற்றுலா வீடியோக்கள் இருந்தது. தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றை ஆராய்ந்த போது அவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது தெரியவந்தது.

இதனால் ஜோதி மல்ஹோத்ரா குறைந்த காலத்தில் அவர் அபார வளர்ச்சி அடைந்ததும் தெரியவந்தது. அவரது தந்தையின் சாதாரண தச்சு தொழிலாளி. டெல்லியில் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த ஜோதி மல்ஹோத்ரா கொரோனாவின் போது வேலை இழந்ததாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர். அதற்குப் பிறகு யூட்யூப் சேனலையும் தொடங்கி இருக்கிறார்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு சென்ற போது அங்கு டேனிஸ் என்ற ரஹீமின் அறிமுகம் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் உளவாளியாக ஜோதி மல்ஹோத்ரா மாறியதாக கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற அவர் அங்கு உளவு அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் அதிகாரிகளை சந்தித்து பேசி இருக்கிறார். மறுபடியும் இந்தியா வந்த அவர் டெலிகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்டவற்றின் மூலமாக பாகிஸ்தானை சேர்ந்தவர்களோடு பேசியிருக்கிறார்.

மேலும் தனது வீட்டில் கூட சந்தேகம் வந்து விடக் கூடாது என்பதற்காக ஐஎஸ்ஐ உளவு அதிகாரிகளின் பெயரை இந்துக்கள் பெயரில் பதிந்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு சென்ற போது நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் நவாஸை ஜோதி மல்ஹோத்ரா சந்தித்து பேசிய தகவலும் வெளியாகி இருக்கிறது. பலமுறை அவர் சீனாவுக்கும் சென்ற நிலையில், உளவுத்துறையின் பார்வை மல்ஹோத்ரா மீது விழுந்தது. இதை அடுத்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்ட நிலையில் தான் அவர் உளவாளியாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியது. மேலும் சீனாவுக்கும் அவர் உளவாளியாக செயல்பட்டது தற்போது தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் ஜோதி மல்ஹோத்ரா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் யூட்யூபர்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். குறிப்பாக ஒடிசாவை சேர்ந்த பிரியங்கா சேனாபதி என்பவருடன் சேர்ந்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அவரும் பாகிஸ்தானுக்கு பயணம் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து ஹரியானா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகிர் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃபுலியன்ஸர்கள், யூட்யூபர்களை ஐஎஸ்ஐ அமைப்பு தங்கள் உளவாளிகளாக மாற்றி இருக்கிறது. இதற்காக கோடிக்கணக்கான பணத்தை பாகிஸ்தான் வாரி இறைத்திருக்கிறது. குறிப்பாக சுற்றுலா என்ற பெயரில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட இடங்கள், ரயில்வேக்கு சொந்தமான இடங்கள், பிரபல ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை இவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதை வைத்து உளவு அமைப்புகள் தீவிரவாதிகளுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜோதி மல்கோத்ரா இந்தியாவில் உள்ள பல்வேறு யூட்யூபர்களை தொடர்பு கொண்டு பேசியதும் தெரிய வந்திருக்கிறது. அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் பலர் சிக்குவார்கள் என்கின்றனர் அதிகாரிகள்.




