
பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் வரை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி சாத்தியமில்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
புதுடெல்லி, மே 11 2025:

பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே நிரந்தர அமைதிக்கு சாத்தியம் இல்லை என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து ஓவைசியிடம் இருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “போர் நிறுத்தம் செய்தாலும் இல்லாவிட்டாலும், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நாம் பின்தொடர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஆயுதப்படைகளின் துணிச்சலுக்கும் பாராட்டத்தக்க திறமைக்கும் நான் நன்றி கூறுகிறேன். ராணுவ வீரர் எம். முரளி நாயக் மற்றும் ஏடிடிசி ராஜ் குமார் தாபா ஆகியோருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “மோதலின் போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த அனைத்து பொதுமக்களுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்” எனவும் ஓவைசி தெரிவித்துள்ளார். இதையடுத்து, “பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை அகற்றும் வரை இரு நாடுகளுக்கு இடையே நிரந்தர அமைதி ஏற்பட வாய்ப்பு இல்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.




