
சென்னை: அமித்ஷா சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி “எந்த கூட்டணியாவது நிலையாக இருந்ததுண்டா? அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணிகளில் மாற்றம் கண்டிப்பாக ஏற்படும்.”என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கமளித்த அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். “இந்த சந்திப்பு மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே. அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அமித் ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதற்கான கோரிக்கை மனுவையும் வழங்கியுள்ளோம். காலையிலேயே இதைத் தெளிவாக விளக்கினேன்,” என்று கூறினார்.
அதிமுக கூட்டணி நிலைப்பாட்டைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “எந்த கூட்டணியாவது நிலையாக இருந்ததுண்டா? அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணிகளில் மாற்றம் கண்டிப்பாக ஏற்படும். 2019 தேர்தலுக்கான கூட்டணி அறிவிப்பு கூட பிப்ரவரி மாதத்தில் மட்டுமே வெளியானது. அதேபோல், எதிர்வரும் தேர்தல் நெருங்கும்போது ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் ஆலோசித்து, இறுதி முடிவை எடுக்கப் போகிறோம்,” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், பாஜகவின் நிலைப்பாடு குறித்து பதிலளித்த அவர், “அமித் ஷா கூறுவது, அவரது கட்சியின் அணுகுமுறை. ஆனால், அதிமுகவின் கூட்டணி நிலைமையை பற்றிய இறுதி முடிவு எப்போது எடுக்கப்பட்டாலும், அதுகுறித்து அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து தகவல் வழங்கப்படும். இதுகுறித்து எந்தவிதமான குழப்பமும் தேவையில்லை,” என்றார்.
அத்துடன், அதிமுகவின் முக்கிய குறிக்கோளை வலியுறுத்திய அவர், “எங்களுக்கு முக்கிய இலக்கு, தமிழகத்தில் மக்கள் விரோதமாக செயல்படும் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே. அதற்காக எந்த முயற்சியையும் தவற விடமாட்டோம். திமுகவை தோற்கடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக மேற்கொள்ளும்,” என உறுதியளித்தார்.
இந்த நிலையில், தமிழக அரசியலில் எதிர்கால கூட்டணி அமைப்பு தொடர்பாக மேலும் எந்த மாற்றங்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்பதே சிறந்தது!




