தமிழகம்

விஜய் அரசியல் புரிதலோடு பேச வேண்டும்: பிரதமர் குறித்த விமர்சனத்திற்கு அண்ணாமலை பதில்

புதுடெல்லி: “விஜய் பேசும்போது அரசியல் விழிப்புணர்வுடன் பேச வேண்டும். அரசியலில், ஒருவரை மக்கள் ஏற்க, அவருக்கு ஓர் அரசியல் மைலேஜ் கிடைக்க, அவர் குறிப்பிடும் நபர்கள் முக்கியம். ‘ஒரு ரவுடியை அடித்தால்தான் மற்றொரு ரவுடியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ போன்றவை வெறும் சினிமா வசனங்கள். யாரைப் பற்றிப் பேசினால் பிரச்சாரம் கிடைக்கும் என்பதை அறிந்தே சிலர் பேசுகிறார்கள்,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

டெல்லியில் இன்று (மார்ச் 28) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா, அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் ஆகியோருடன் தமிழக பாஜகவின் வளர்ச்சி, பணிகள், மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து கலந்துரையாடினேன். தமிழகத்துக்கு இது மிக முக்கியமான தேர்தல். திமுக ஆட்சி மீது எங்கள் எதிர்ப்பை தெளிவாக மக்களிடம் கொண்டு செல்கிறோம்.

2026 தேர்தல், தமிழக மக்களின் நலனுக்கானது. கூட்டணியைக் குறித்து பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. முக்கியமானது, தமிழக மக்களின் நலன். கூட்டணிப் பற்றிய முடிவுகள் கட்சியின் மூத்த தலைவர்கள் மூலம் உரிய நேரத்தில் வெளிவரும். எனது நிலைப்பாட்டையும் தலைமைக்கு தெரிவித்துள்ளேன். எங்கள் பிரதான எதிரி திமுக; அவர்களை ஆட்சியிலிருந்து மாற்றவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

தமிழகத்தில் தவெக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. விஜய் மற்றும் அவருடன் மேடையில் பேசுபவர்கள் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் என்பது வெறும் மேடையில் பேசுவதை மட்டுமே குறிக்கவில்லை; இது களத்தில் செயல்படுவதைப் பற்றியது. 1973-ல் தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தியாவின் மக்களவைத் தொகுதி 525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது. இந்த 20 புதிய இடங்களில் தமிழகத்துக்கு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்; தமிழகத்தில் திமுக ஆட்சி செய்தது. கருணாநிதி இந்திரா காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டு இதைப் பற்றிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விஜய் குற்றச்சாட்டு வைக்க விரும்பினால், யார் மீது வைக்க வேண்டும்? காங்கிரஸ், திமுக மீதே செய்ய வேண்டும். ஆனால், அவர் பிரதமர் மோடியை குறிவைக்கிறார், ஏனெனில் அதற்கு ஊடக கவனம் கிடைக்கும். ஆதாரங்களின் அடிப்படையில் பேசினால், நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.

‘குருவி’ படம் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸ் ஐ அறிமுகம் செய்ததே விஜய்தான். ‘பீஸ்ட்’ உட்பட அவரது படங்களை ரெட் ஜெயின்ட் தயாரித்தும், விநியோகித்தும் உள்ளது. இவை எல்லாம் மறுக்க முடியாத உண்மைகள்.

இன்று தவெக மேடையில் பேசுபவர்கள், லாட்டரி பணத்தால் திமுகவுக்காக செயல்பட்டவர்கள், பின்னர் விசிக-வுக்கு தாவியவர்கள், இப்போது மீண்டும் தவெக-வில் உள்ளவர்கள். தமிழக வெற்றிக் கழகத்தை, லாட்டரி விற்பனை கழகமாக மாற்ற வேண்டும் என்பது கூட சிலரின் யோசனை,” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button