உலகம்

பாக். ரயில் கடத்தல்- 300 பிணைக்கைதிகள் மீட்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் கடத்தல் சம்பவத்தில் தீவிரவாதிகள் 33 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ராணுவத்தினர், 300க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் நான்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது,

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தினம் காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அப்போது பலுச் விடுதலை படையை (பிஎல்ஏ) சேர்ந்த தீவிரவாதிகள், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறைபிடித்தனர். ரயிலின் குறிப்பிட்ட பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களும் பயணம் செய்தனர். அப்போது அவர்களுக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 30 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

இதையடுத்து ரயிலில் உள்ள பிணைக் கைதிகளை காப்பாற்றுவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் களத்தில் இறங்கினர். நேற்று 2-வது நாளாக நடைபெற்ற மீட்புப் பணியில் இதுவரை 300 பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 33 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் இடைவிடாத துப்பாக்கிச் சண்டையை தொடர்ந்தனர். இதனால் தீவிரவாதிகளுக்கு அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. நான்கு பாகிஸ்தான் இராணுவத்தினர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் நாட்டிலிருந்து தீவிரவாதம் என்ற அரக்கனை முற்றிலுமாக ஒழிக்கும் வரை அதற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடர்வோம். பாகிஸ்தானில் அமைதியின்மை மற்றும் குழப்பத்தை பரப்பும் ஒவ்வொரு சதியையும் நாங்கள் முறியடிப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button