தமிழகம்

அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கருவிகள் சேதமடைந்துள்ளன. இந்த விபத்தால் 3 அலகுகளில் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அருகே அமைந்துள்ள இந்த அனல்மின் நிலையம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்குச் சொந்தமானது. 1979-ல் தொடங்கப்பட்ட இந்த நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 45 ஆண்டுகள் பழமையான இந்த நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நிலையத்தின் 1 மற்றும் 2-வது அலகுகளுக்கான கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள கேபிள் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல அடுக்குகளாக இருந்த கேபிள்களில் பற்றிய தீ, சிறிது நேரத்தில் வேகமாகப் பரவியது. தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி நேற்று காலை 10 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், உள்பகுதிகளில் பரவிய தீயை முழுமையாக அணைக்க நேற்று மாலை வரைப் போராட வேண்டியிருந்தது.

இந்த விபத்தில், 1 மற்றும் 2-ம் அலகுகளுக்கான கட்டுப்பாட்டு அறையில் உள்ள கேபிள்கள், உபகரணங்கள், சாதனங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதனால் இந்த 2 அலகுகளிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தீ பரவாமல் இருக்க 3-வது அலகின் கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால் அந்த அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 4 மற்றும் 5-வது அலகுகளில் மட்டும் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தீயணைப்பு பணியின்போது, புகை மண்டலத்தில் சிக்கிய 2 தீயணைப்பு வீரர்கள் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், “தீ விபத்தில் 1 மற்றும் 2-வது அலகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தீ முழுமையாக அணைக்கப்பட்டாலும், உள்ளடங்கிய பகுதிகளில் இருந்து இன்னும் தீ ஜுவாலைகள் வந்து கொண்டிருப்பதால் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட 2 தீயணைப்பு வீரர்களும் தற்போது நலமாக உள்ளனர்” என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button