தமிழகம்

சிறுபான்மையினருக்கு என்றும் துணையாக இருப்பேன்- இப்தார் நிகழ்வில் எடப்பாடியார் பேச்சு

சென்னை: “சிறுபான்மையினரை பாதுகாத்து, அரவணைத்து, அன்பு செலுத்துவதை எனது முதன்மையான கடமையாகக் கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் நான், எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னையில் இன்றைய இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் குறிப்பிட்டார்.

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் சென்னை எழும்பூரில் இன்று (மார்ச் 21) இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று நோன்பை திறந்துவைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: “நபிகள் நாயகத்தின் போற்றுதலுக்குரிய வழிகாட்டுதலில் வாழ்பவர்களுக்கு இந்த ரமலான் மாதம் வசந்த காலம். உங்கள் நோன்பைப் போற்றுகிறோம். உங்கள் ஞானத் தேடல்களை மதிக்கின்றோம். உங்கள் ஜகாத் கொடைகளையும், இறை அச்சத்தோடு வாழ நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டுகிறோம்.

நாம் ஒன்றுபட்டு, அன்பும் சமாதானத்துடன் வாழ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல ஆண்டுகளாக அதிமுக சார்பில் இஃப்தார் விழாவை நடத்தி வந்தார். எம்ஜிஆர் தனது வாழ்வில் இஸ்லாமிய நண்பர்கள் பலருடன் இருந்தார். இஸ்லாமிய மார்க்கத்தை தவறாக சித்தரிக்கும் திரைப்பட காட்சிகளுக்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஜெயலலிதா.

அந்த ஒப்பற்ற இரு தலைவர்களால் அரசியலில் உருவாக்கப்பட்டவன் நான். பதவிக்கோ அல்லது புகழ்ச்சிக்கோ அரசியலுக்கு வந்தவன் அல்ல பழனிசாமி. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அண்ணாவின் கொள்கையால் கவரப்பட்டு, மக்களுக்குத் தொண்டாற்ற வந்தவன் நான். எனக்கு தனிப்பட்ட கருத்து அல்லது நிலைப்பாடு கிடையாது. சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழனாகவும் இந்தியனாகவும் இயல்பாக வாழ்ந்துவரும் நான், எல்லோருக்கும் சமநீதி, சமபாதுகாப்பு, சமஉரிமை கிடைக்க வேண்டும் என்று மனதார நினைப்பவன்.

சிறுபான்மையினரை பாதுகாத்து, அரவணைத்து, அன்பு செலுத்துவதை, என் முதன்மையான கடமையாகக் கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் நான், எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பேன். மக்கள் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொண்டு செயல்படும் இயக்கம் அதிமுக. அவரவருக்கு வழங்கப்பட்ட தனித்தன்மையை நாங்கள் மதிக்கிறோம், போற்றுகிறோம், வணங்குகிறோம், பாதுகாக்கிறோம்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக துணை தலைமை காஸி ஹாஜி முகம்மது அக்பர் அலி ஷா ஆமிரி, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் எஸ். அப்துல் ரஹீம், ஆற்காடு இளவரசர் முகம்மது அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button