நாடாளுமன்றத்தில் உரிமை மறுக்கப்பட்டதாக ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகார் தெரிவித்தார். ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் மக்களவை செயல்படுவதாகவும், முக்கிய பிரச்சினைகளை பேச வாய்ப்பு கோரிய போதெல்லாம் அதை மறுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “என்ன நடக்கிறது என்பது எனக்கே புரியவில்லை. பேச அனுமதிக்குமாறு கேட்டேன், ஆனால் சபாநாயகர் பதிலளிக்காமல் வெளியேறிவிட்டார். இது மக்களவை நடத்தும் முறையாக இருக்க முடியாது. அவையை ஒத்திவைப்பதற்கும் தேவையில்லை” என்று கூறினார்.
மேலும், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பேசும் உரிமை எனக்கு உள்ளது. நான் எதுவும் செய்யவில்லை, அமைதியாக இருந்தேன். ஆனால் பேச விட மறுக்கப்பட்டேன். ஜனநாயகத்துக்கு இங்கு இடமே இல்லை. மகா கும்பமேளா, வேலைவாய்ப்பின்மை போன்ற முக்கிய விவகாரங்களை பேச விரும்பினேன். எனினும், எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார்.
விதிகளை கடைபிடிக்க வேண்டும் – சபாநாயகர் ஓம் பிர்லா
மக்களவையின் கட்டுப்பாட்டையும், மரியாதையையும் நிலைநிறுத்துவதற்காக விதிகளை பின்பற்ற வேண்டும் என்று ராகுல் காந்தியை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர் எதற்காக அந்த அணுகுமுறையை எடுத்தார் என்பதற்கான காரணம் உடனடியாக வெளிப்படவில்லை.
மக்களவையில் உரையாற்றிய சபாநாயகர், “உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தையும் மாண்பையும் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். சில உறுப்பினர்கள் அவையின் மரியாதைக்கு எதிராக செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுவரை மக்களவையில் தந்தை-மகள், தாய்-மகள், கணவன்-மனைவி போன்ற உறவுகள் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் விதி 349-ஐ பின்பற்றுவார் என எதிர்பார்க்கிறேன்” எனக் கூறினார்.
சபாநாயகரை சந்தித்த காங்கிரஸ் எம்.பி.கள்
இந்த விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவை துணைத்தலைவர் கவுரவ் கோகாய், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்தனர். ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை பற்றிய கேள்விகளை அவர்கள் எழுப்பியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.




