தமிழகம்

டாஸ்மாக் ஊழலில் சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்- விஜய்

சென்னை: “ஊழலில் ஈடுபடும் திமுகவினர், காட்டாற்றையே உருவாக்கும் திறன் படைத்தவர்கள். தற்போது அமலாக்கத் துறை கைப்பற்றியிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் என்பது கையளவு நீர் போன்றது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மேலும் தீவிரமாக விசாரணை நடத்தினால், சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்குவார்கள்” என்று தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து இன்று (மார்ச் 16) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 6-ஆம் தேதி (06.03.2025) தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய நபர்களின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத பணம் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களை பணியமர்த்துதல், இடமாற்றம் செய்தல், வாகன டெண்டர்கள், பார் உரிமம் வழங்கும் டெண்டர்கள், மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூபாய் 10 முதல் 30 வரை வசூலித்தது, டிஸ்டில்லரீஸ் மற்றும் பாட்டிலிங் நிறுவனங்கள் மூலம் நடந்த முறைகேடுகள் என பலவற்றை அமலாக்கத் துறை பட்டியலிட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக, திட்டமிட்ட முறையில் கணக்கில் வராத பணம் ஈட்டுதல், சட்டவிரோத பணப் பரிமாற்றம், டிஸ்டில்லரீஸ் மற்றும் பாட்டிலிங் நிறுவனங்களுக்கிடையேயான தொடர்பு, நிதி ஆவண மோசடிகள், மறைமுக பணப் பரிமாற்றங்கள், முறையான ஏய்ப்பு போன்றவை நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க.. ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை குறித்து அவரது மகன் அவசர விளக்கம்

இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்ற முறைகேடுகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்த, திறமையான நபர்களே ஈடுபட்டிருக்க முடியும் என்பது தெளிவாகிறது.

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகக் கூறும் திமுக அரசு, மக்களை மதுவுக்கு அடிமையாக்கி, அதே மது விற்பனையில் முறைகேடு செய்துள்ளது. இந்த செயலை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

ஊழல் செய்வதில் திமுகவுக்கு இணை திமுகவே. தற்போது கிடைத்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் என்பது வெறும் துளிதான். முறையாக விசாரணை நடத்தினால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்.

எனவே, இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். ஆனால், உண்மையிலேயே நியாயமான விசாரணை நடக்குமா என்பது சந்தேகமே.

இந்த முறைகேடு மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து 200 தொகுதிகளையும் கைப்பற்றலாம் என்று திமுக நினைத்தால் அது பகல் கனவுதான். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை மக்கள் தோற்கடிப்பார்கள்” என்று விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button